தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவெக தலைவர் விஜய் தவித்து வரும் சூழலில், திராவிடக் கோட்டையான தி.மு.க. கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் தங்களுக்குள் அவசர ஆலோசனையைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தலில் விசிக, சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட்), சிபிஎம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ இந்தக் கட்சிகள் தனியாக ஒன்றுகூடி முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட முக்கிய இடதுசாரி மற்றும் விசிக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தொங்கு சட்டமன்ற நிலை நீடிப்பதால், தவெக தரப்பிலிருந்து ஆதரவு கோரப்பட்டால் என்ன செய்வது, திமு கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்தும், தங்களின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.