தமிழகத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்குவதற்காகச் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் முறைகேடு நடப்பதாகவும், வாக்காளர்களின் பெயர்கள் உள்நோக்கத்துடன் நீக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, இதற்கு எதிராக தி.மு.க சார்பில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்ற கண்டனக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்கவில்லை.

இதனால், SIR திருத்தப் பணிகளுக்குத் தவெக மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும், பா.ஜ.க-வுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, SIR திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 16-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தவெக சார்பில் தனிப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.