சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில், தனது குழந்தைகளின் உயிரைப் பணையம் வைத்து பெண் ஒருவர் ஆபத்தான முறையில் வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், ‘பிரபலமாக’ மாறவும் பலரும் விதவிதமான வீடியோக்களை  பதிவிட்டு வருகின்றனர். தரமான உள்ளடக்கங்களை வழங்கி புகழ்பெற்றவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சில நிமிடப் புகழுக்காகவும், சில ‘லைக்’குகளுக்காகவும் (Likes) அறிவற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் ஆழமான கிணற்றின் குறுகலான சுவரில் நின்று கொண்டு நடனமாடுகிறார். அந்தப் பெண் மட்டுமின்றி, தனது இரண்டு குழந்தைகளையும் அந்தச் சுவரில் நிற்க வைத்துள்ளார். வீடியோவின் ஒரு கட்டத்தில், அந்தக் குழந்தைகளின் கைகளைப் பிடித்து கிணற்றுக்குள் அந்தரத்தில் தொங்கவிட்டபடி, எவ்வித அச்சமும் இன்றி அந்தப் பெண் சிரித்துக் கொண்டே நடனமாடுகிறார்.

 

சற்று நிலைதடுமாறினாலும் குழந்தைகளின் உயிர் பறிபோகும் அபாயம் உள்ள சூழலில், அந்தப் பெண்ணின் இந்த பொறுப்பற்ற செயல் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ ‘X’ தளத்தில் @Na72866 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அதன் தலைப்பில், “பின்தொடர்பவர்கள் (Followers) மற்றும் பணத்தின் மீதான பசியால் மக்கள் சுயநினைவை இழந்துவிட்டனர். புகழுக்காக குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்த செயல்  மனிதநேயத்தை விடப் பெரியதாகிவிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்:
“புகழுக்காக இவ்வளவு ஆபத்தான காரியத்தைச் செய்வதா?” என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். “இவருக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என மற்றொருவர் வலியுறுத்தியுள்ளார். “குழந்தைகளை OLX-இல் வாங்கினாரா? இப்படியா பொறுப்பின்றி நடப்பது?” எனப் பலரும் கோபமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளப் பயன்பாடு என்பது பொழுதுபோக்கிற்காக இருக்க வேண்டுமே தவிர, அது உயிரோடு விளையாடும் விபரீதமாக மாறக்கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது.