தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்ட அரசியல் களம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதிமுகவின் வலுவான முகமாக அறியப்படும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், இந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தொகுதிப் பங்கீட்டில் அந்தத் தொகுதியை அதிமுக தலைமை பாஜக-வுக்கு ஒதுக்கியது மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களை மதிக்காமல், வெற்றி வாய்ப்புள்ள தொகுதியைத் தாரை வார்த்துக் கொடுத்த அதிமுக தலைமை மீது அவர் மிகுந்த கோபத்தில் இருப்பதாகத் தகவல் கசிகிறது.
மணிகண்டனின் இந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகள், அவரிடம் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. “அதிமுக-வில் உங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்றால், தவெக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிடுங்கள்” என அவருக்குத் தூது அனுப்பப்பட்டுள்ளதாம்.
ஒருவேளை மணிகண்டன் தவெக-வில் இணைந்தால், அது தென் தமிழகத்தில் அதிமுக-வுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் இந்த “மெகா பிளான்” ராமநாதபுரம் தொகுதியின் தலையெழுத்தையே மாற்றப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
