திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான ஆத்தூரில், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நேற்று இபிஎஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில், பாலமுருகனுக்குப் பதிலாக விஸ்வநாதன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருப்பது அவருக்குப் பேரிடியாக அமைந்தது.
தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த பாலமுருகன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்தார். அதிமுக-விலிருந்து வெளியேறிய வேகத்திலேயே, திண்டுக்கல் மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தியான அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், டி.வி.பாலமுருகன் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
தனது ஆதரவாளர்களுடன் திமுக கூடாரத்திற்குச் சென்றுள்ள பாலமுருகன், வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உழைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக-வின் வேட்பாளர் தேர்வு முடிவால் ஒரு முக்கிய நிர்வாகி ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளது, ஆத்தூர் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா அல்லது விஸ்வநாதன் அதனைச் சமாளிப்பாரா என்ற விவாதம் இப்போதே திண்டுக்கல் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.
