காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், விரிவான விவாதங்கள் ஏதுமின்றி ரகசியமான முறையில் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் உண்மையான தொண்டர்களின் பல ஆண்டுகால உழைப்பு, கட்சிக்காகச் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சில நபர்களால் விற்பனை செய்யப்படுவதைப் பார்த்து வேதனை அடைவதாகவும், இந்த மோசமான சூழலைக் கண்டு மௌனமாக இருக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோதிமணி தனது கண்டன அறிக்கையில், பொறுப்பாளர்களோ அல்லது மாநிலத் தலைவரோ மட்டுமே கட்சி ஆகிவிட முடியாது என்றும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளே கட்சியின் உண்மையான பலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வும் தொடருமானால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு இது குறித்து மேலும் விரிவாகப் பேசப் போவதாகவும், தற்போதைய தேர்வு முறைகள் கட்சியின் நலனை முழுமையாகச் சமரசம் செய்துவிட்டதாகவும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
