2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த விஜய், ஒரு முக்கிய மனுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில், ஆளுங்கட்சியான திமுக-வுக்குச் சாதகமாகச் செயல்படும் அரசு அதிகாரிகளை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விஜய்யின் இந்த நேரடி ஆக்ஷன், அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைத்துள்ளது.
முன்னதாக, சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட 5 முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் அனுமதி கேட்டிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடியைக் காரணம் காட்டி அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இந்தத் தடைக்கு பின்னால் ஆளுங்கட்சியின் அழுத்தம் இருப்பதாகத் தவெக தரப்பு குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது விஜய் நேரடியாகத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தனது முதல் அரசியல் பயணத்திலேயே அதிகார வர்க்கத்திற்கு எதிராக விஜய் காட்டியுள்ள இந்த “மாஸ்” வேகம், அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வரும் தேர்தலில் திமுக-வுக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
