அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ள பாலியல் சீண்டல் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார்.
இதனால் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ஒரு மாணவியின் வறுமையைப் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எழுந்துள்ள புகார், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே இதே வளாகத்தில் நடைபெற்ற பாலியல் புகாரில் தொடர்புடைய “சார்” இதுவரை கைது செய்யப்படாததன் பின்னணியில் தற்போதைய புகாரும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது காவல்துறையினர் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அனைத்து “சார்”களும் தப்பிக்க முடியாமல் சிறைக்குச் செல்வது உறுதி என்று தனது பதிவின் மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
