
சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும் ஒருவருக்கொருவர் புகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது சீமான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலையை புகழ்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான் உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துச் செல்கிறார் என்று புகழாரம் சூட்டியதோடு தமிழகத்தில் பாஜக கட்சி வளர்வதற்கு அன்பு உள்ளவள் அண்ணாமலை தான் காரணம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலையும் சீமானை புகழ்ந்தார். அவர் பேசியதாவது, நான் போர்க்களத்தில் நிற்கக்கூடிய ஒரு தளபதியாக தான் அண்ணன் சீமானை பார்க்கிறேன். இதற்கு காரணம் அவருடைய கொள்கை. அவர் கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்ற கோட்பாடு போர்க்களத்தில் தைரியமாக நின்று போராடுவார்.
இதுதான் அவரை ஒரு தனிப்பெரும் தலைவராக உயர்த்தியுள்ளது. எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். இருப்பினும் நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அரசியலில் அவர் கொண்ட நேர்மையும் மன உறுதியும் மட்டும்தான்.
நாங்கள் இருவரும் முதல்முறையாக கலந்து கொண்ட நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது என்றார். மேலும் சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவருக்கொருவர் புகழ்ச்சியாக பேசிக்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.