தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தாலும், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியை அமைக்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு விஜய் தடையாக இருக்கக் கூடாது என்றும், அவர் தங்களது கூட்டணியில் இணைந்தால் தகுதியான இடங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பாஜக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர், விஜய் சாதிக்க வேண்டும் என்றால் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என வெளிப்படையாகவே தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாஜகவின் இந்த ‘வலைவீச்சு’ முயற்சிக்கு தவெக தரப்பில் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. தனது கட்சியின் கொள்கை பிரகடனத்தின் போதே பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் தனது அரசியல் எதிரிகளாக விஜய் அடையாளப்படுத்தியுள்ளார்.

மேலும் “மதவாத அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கும் தமிழகத்தில் இடமில்லை” என்று கூறி வரும் விஜய், பாஜகவின் கூட்டணி அழைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவின் இந்தத் தூது முயற்சி ஒருபுறம் இருக்க, விஜய் தனது தனித்துவத்தைப் பேணுவாரா அல்லது தேர்தல் நேரத்தில் வியூகங்களை மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.