சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில், கடந்த ஜூன் 5, 2026 அன்று கை, கால், தலை மற்றும் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் நீல நிற சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கொலையானவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பதும், அவர் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி வடமாநில நோயாளிகளுக்கு உதவும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரது ஆடையில் இருந்த பார்கோடு, சிசிடிவி காட்சிகள் மற்றும் ரேபிடோ வாகனப் பதிவுகளைக் கொண்டு போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், அமீர் அலியின் இரண்டாவது மனைவியான ரோஹிமா மற்றும் அவரது ஆண் நண்பர் அஷ்ரஃப் அலி ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். கணவர் அமீர் அலிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாகவும், அவர் தன்னை அடிக்கடி கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகவும் ரோஹிமா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும், தங்களுடைய திருமணத்தை மீறிய காதலுக்கு இடையூறாக இருந்ததாலும், ஜூன் 2-ஆம் தேதி அமீர் அலியின் பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் அஷ்ரஃப் அலியின் உதவியுடன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், உடலை மறைப்பதற்காக சமையல் கத்தியால் தலை, கை, கால்கள் மற்றும் மர்ம உறுப்பைத் துண்டித்து, நடுவுடலை மட்டும் சூட்கேஸில் அடைத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசியுள்ளனர் மேலும், வெட்டப்பட்ட தலைப்பகுதியை செங்கல்பட்டு கொளவாய் ஏரியிலும், கை, கால்களை தேனாம்பேட்டை பக்கிங்காம் கால்வாயிலும் வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
