சென்னையில் நடைபெற்ற ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழிசை சௌந்தரராஜன், திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் நாடகம் எனச் சாடினார். “தேர்தல் சமயத்தில் தங்களின் சுயநலத்திற்காக இந்தியில் பிரச்சாரம் செய்தவர்களும், இந்தியில் ஓட்டு கேட்டவர்களும் தான் இந்த திமுகவினர். தைரியம் இருந்தால் தயாநிதி மாறனை இந்தியில் போஸ்டர் அடிக்க மாட்டேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்” என அவர் அதிரடியாகச் சவால் விடுத்தார். திமுகவினர் இரட்டை வேடம் போடுவதாகவும், அவர்களின் இந்தி எதிர்ப்பு கொள்கை உண்மையானது அல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், தோல்வி பயத்தை மறைக்கவே திமுக தற்போது மொழிப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுப்பதாகத் தெரிவித்தார். “நாங்கள் பச்சோந்திகளைப் போலச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறுபவர்கள் கிடையாது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட தமிழிசை, திமுகவின் அரசியல் தந்திரங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். ஹோலி கொண்டாட்டத்தின் உற்சாகத்திற்கு இடையே தமிழிசை எழுப்பிய இந்த அரசியல் விமர்சனங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
