தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வார்த்தைகளை நீக்கியும் சில வார்த்தைகளை தானாக சேர்த்தும் பேசினார். இதனால் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எழுந்து ஆளுநர் உரையின் நீக்கி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூற உடனடியாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு பொங்கல் விழாவுக்கு ஆளுநர் தமிழ்நாடு அரசின் முத்திரைக்கு பதில் மத்திய அரசின் முத்திரையை பயன்படுத்தியதோடு தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கும் பல கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் ஆளுநர் மீது வருகிறது. இதனால் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. டெல்லி சென்று வந்த பிறகு ஆளுநர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசுவது இல்லை. மேலும் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிகிறது என்று கூறினார்.