
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் நேற்று தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேச முயன்றேன்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. தமிழக மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அதிமுக செயல்படுகிறது. ஆனால் எங்களுக்கு நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வெளியேறியுள்ளோம். நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காவல்துறை அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அரசோ குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் என்று தங்கள் பொறுப்பை தட்டி கழிக்கிறது. மேலும் தினமும் கொலை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிப்பது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று கூறினார்.