
தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் மூன்று ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை நிலவுகிறது. ஏப்ரல் மாதத்தில் இது மேலும் அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பின்பற்ற குறையை சமாளிப்பதற்கு சில நேரங்களில் ஒரு யூனிட் 20 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டி இருக்கும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக நிலைமையை சமாளித்து விட முடியும் என்றாலும் மாலை நேரத்தில் மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்துதான் மின்சாரத்தை வாங்க வேண்டும். சில நேரத்தில் ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்க வேண்டி இருக்கும்.
கோடை காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கும். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75 சதவீதம் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்திய தொகுதியில் இருந்து பெறப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். ஆனால் தமிழகத்தின் நிலைமை தற்போது தலைகீழாக உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை 6 ரூபாய்க்கு குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்ற நிலையில் 20 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே நிலைமை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. இதனால் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.