தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நாடு முழுவதும் நிலவும் தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து, நாளை (ஏப்ரல் 29) மாலை 6.30 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Poll) வெளியாக உள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது ஊடகங்களில் வெளியிடவோ இந்திய தேர்தல் ஆணையம் கடும் தடை விதித்திருந்தது.
மேற்கு வங்கத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து அதாவது மாலை 6.30 மணி முதல் கருத்துக்கணிப்புகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் பிரிவு 126-ஏ-வை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. அபராதம். அல்லது சிறை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.
தமிழகத்தில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்புகளை எடுத்துத் தயாராக வைத்துள்ளன. நாளை மாலை 6.30 மணிக்கு இந்த முடிவுகள் வெளியாகும் என்பதால், தமிழகத்தில் அடுத்த ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்த முதற்கட்ட சித்திரம் தெரியவரும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
