தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, மாநிலம் கொலைக்களமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். மாநிலத்தில் அரங்கேறும் தொடர் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தவெக அரசு கையாலாகாத நிலையில் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக அவர் தனது கண்டன அறிக்கையில் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, நெல்லை அருகே இளைஞர் படுகொலை மற்றும் சேலம் அருகே பெண் படுகொலை என வரிசையாக நடைபெறும் கொடூரச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தினமும் செய்தித் தாள்களைத் திறந்தாலே கொலை மற்றும் கொள்ளைச் செய்திகளே நிரம்பிக் கிடப்பது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் காவல் துறையின் மெத்தனப் போக்கையுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித பயமும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தவெக அரசும் முதலமைச்சரும் உடனடியாக விழித்துக்கொண்டு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகள் மீது இரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
