நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியிலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவில் ராணுவ பிரிவினர்களின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் போன்றவைகள் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த வருடம் தமிழக அரசின் அலங்கார  ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காத நிலையில் இந்த வருடம் தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் அணிவகுப்பில் பங்கேற்றது. இந்நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில் எது உங்களின் மனதை அதிக அளவில் கவர்ந்தது என ஒன்றிய அரசு மக்களிடம் கருத்து கேட்பு நடத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான உங்களுடைய கருத்தை https://mygov.in/group-poll/vote-your-favorite-tableau-republic-day-2023/என்று இணையதளத்துக்குள் சென்று வாக்களிக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ் நாயுடு என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இதேபோன்று கேரளாவுக்கு பதில் கேரேளா எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பெயரை மாற்றி பதிவு செய்துள்ளது சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.