
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பசுமை தாயகம் சார்பில் தமிழக சதுப்பு நிலங்களை காப்போம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களில் சதுப்பு நிலங்கள் என்பது மிக முக்கியமானவை. பெருவாரியான சதுப்பு நிலங்கள் தற்போது பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளது.
அதிலும் பல சதுப்பு நிலங்களில் திடக்கழிவுகள் மற்றும் கழிவு நீர் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகின்றது. சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்றன. அதே சமயம் மாசுக்களையும் கட்டுப்படுத்துகிறது. மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன் செய்கின்றது. மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரித்து பறவைகளின் ஆதாரமாக இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் 2004 ஆம் ஆண்டு இந்த பகுதியில் சுனாமி வந்தபோது கூட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை 3 மாதங்களில் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டியலில் உள்ள சதுப்பு நிலங்களின் எல்லைகளை வரையறை செய்து தமிழக அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். ஒருவேளை தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் சார்பில் நீதிமன்றத்திற்கு சென்று நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.