தமிழக அரசின் ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தின்’ கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில், நெல்லையில் டிக்கெட் இன்றி பயணித்ததாக இரு பெண்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில், உரிய டிக்கெட் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சக பயணிகள் கூறுகையில், “கண்டக்டர்கள் கூட்டமாக இருக்கும்போது பலருக்கு சேர்த்து ஒரே டிக்கெட்டை ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர்; அந்த நபர் இறங்கிச் சென்றால் மற்றவர்களிடம் டிக்கெட் இருப்பதில்லை. இத்தகைய குளறுபடிகளால் நேர்ந்த தவறுக்கு விளக்கம் அளித்தும் பரிசோதகர்கள் அபராதம் வசூலித்துள்ளனர்” என ஆதங்கப்பட்டனர்.

இதனிடையே, இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாமெனவும் கூறி, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.