தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 27 நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இருபது முதல் முப்பது வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு மாதங்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் 30 வயது உட்பட்ட பெண்களுக்கு அல்பென்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்குவதற்கு அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் என சுமார் 1.16 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.