தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் சிக்னல் முறைகளை கையாளும் கட்டுப்பாட்டு அறைகள் போன்றவற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தால் 295 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து முற்றிலும் மனித தவறுகளால் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை அறிக்கையில் ரயில்வே சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவு தான் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து ரயில்வே மண்டலத்திலும் ரயில் சிக்னல் மற்றும் பாதை உட்பட பாதுகாப்பு பிரிவுகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் பழுதடைந்த ரயில் பாதைகள் மற்றும் சிக்னல் போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த உத்தரவை சென்னை, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட ஆறு கோட்டங்களிலும் பின்பற்றி விரைவில் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.