விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரைக் கலங்க வைத்த மர்ம நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி, மறுநாள் காலை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில், டிஎஸ்பி சுந்தரபாண்டியன் தலைமையிலான குழுவினர் வேடநத்தம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று மர்மமான முறையில் நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில், அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது என்பது உறுதியானது.
ராமநாதபுரம் வரை விரட்டிச் சென்ற போலீஸார், அந்த வாகனத்தைத் திருடி வந்த சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (எ) மாவீரன் (30) என்பவனைக் கைது செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கைதான தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே 2020-இல் எட்டயபுரத்தில் 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு உள்ளது.
அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த அவன், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோதே, தனியாகச் சென்ற மாணவியைக் கடத்தி இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவனுக்கு உள்ளூர் நபர்கள் யாரேனும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும், திருட்டு பைக்கை எதற்காக அந்த இடத்திற்குக் கொண்டு வந்தான் என்பது குறித்தும் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது குற்றவாளியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
