தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது பள்ளித் தோழி டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், சுபாஷினியின் தம்பி சுர்ஜித் வாளால் தாக்கி கவினை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுர்ஜித்தை கைது செய்தனர். அவரது மீது கொலை மற்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர்மீதும் “கொலைக்கு தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்றது.

இருவரும் முறையே ராஜபாளையம் மற்றும் மணிமுத்தாறு ஆயுதப்படை காவல் பட்டாளங்களில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமியின் உத்தரவின்பேரில் இருவரும் பணியிடை நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைதான சூர்ஜித் மீது குண்டர் தரப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.