ஈரோட்டில் அமைச்சர முத்துசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பக்கத்து மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி குடித்த 7 பேர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இருந்து வரும் அனைத்து சாலைகளிலும் 24 மணி நேரமும் காவல்துறையினரால் கண்காணிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புதுச்சேரியிலிருந்து ‌ காவல்துறையினரின் கண்காணிப்பை மீறிதான் சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.

தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ள நிலையில் இன்னும் 1000 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. மதுபான கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. நாம் உடனடியாக மதுபான கடைகளை குறைக்க முடியாது. இதற்காக நாம் மக்களை தயார் செய்வதோடு மது குடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுப்பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம். மேலும் நம்முடைய அரசின் நோக்கம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். கள்ளு கடைகள் திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று கூறினார்.