
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று இரவு மின் வாரியம் அறிவித்தது. அதன்படி ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டண உயர்வானது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விரிவாக பார்ப்போம். அதன்படி, 400 யூனிட்டுக்கு மின்கட்டணம் ரூ.4.60 ஆக இருந்த நிலையில் தற்போது 20 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.80 ஆக இருக்கிறது. அதன் பிறகு 401 முதல் 500 யூனிட் வரை 30 பைசா உயர்த்தப்பட்டு ரூ.6.45 ஆகவும், 501 முதல் 600 யூனிட் வரை 40 பைசா உயர்த்தப்பட்டு ரூ.8.55 ஆகவும், 601 முதல் 800 யூனிட் வரை 45 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 9.65 ஆகவும், 801 முதல் 1000 யூனிட் வரை 50 பைசா உயர்த்தப்பட்டு ரூ 10.71 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஆயிரம் யூனிட்டுக்கு மேல் 55 பைசா உயர்த்தப்பட்டு ரூ.11.80 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.8.55 ஆகவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடிசைகள் மற்றும் தாட்கோவுக்கு ரூ.9.80 ஆகவும், ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கு ரூ.8.55 ஆகவும், குடிசை மற்றும் குறு நிறுவனங்களுக்கு 500 கிலோ வாட்சுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.6.95: ஆகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.8.55 ஆகவும், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கு 500 வாட்ஸ்க்கு மேல் ரூ.8 ஆகவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு விசைத்தறிகளுக்கு 500 வாட்ஸ் க்கு மேல் ரூ.9.10 ஆகவும், தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் ரூ.8 ஆகவும், வேளாண் மற்றும் அரசு விதை பண்ணைகளுக்கு ஒரு யூனிட் ரூ. 4.80 ஆகவும், கட்டுமான பணிகளுக்கு ஒரு கிலோ வாட்சுக்கு ரூ.12.85 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் மற்றும் குடிசைகளுக்கான இலவசம் மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.