தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பல்வேறு விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை , புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் பெண்களுக்கு கடன் உதவி போன்றவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மகளிர்காக பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக இந்த பிங்க் நிற ஆட்டோக்கள் சென்னையில் அமலுக்கு வருகிறது. இந்த பிங்க் நிற வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மகளிர் பயன்பெறலாம்.

இதில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு மகளிர் பாதுகாப்பு கண்காணிக்கப்படும். தற்போது 250 gps கருவிகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் வழங்கப்படும் நிலையில் இதற்காக பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு முடித்திருப்பதோடு ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம். அதன் பிறகு 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 23 ஆகும். இதற்காக சென்னை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே தகுதியுள்ள பெண்கள் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.