தலைமை  செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணியே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் உருவகப்படுத்தும் உன்னத நிலையில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இந்த பொறுப்பை நீங்கள் ஏற்றுள்ளீர்கள். அதனால் நீங்கள் தீவிர கவனம்  செலுத்த வேண்டிய இடங்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டத்தில் வரப்படுகிற மனுக்களின் மீது சரியான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமாகும். அதேபோல் திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் நடத்தப்பட வேண்டிய கூட்டங்களை பட்டியலிட்டு ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். சிலர் வாரம் முழுவதும் கூட்டங்களை பரவலாக்கி அடிக்கடி அலுவலர்களை வரவழைத்து அவர்கள் களப்பணியை செய்ய விடாமல் ஆட்சியகரத்திலேயே தவம் இருக்கும்படி செய்து அவர்கள் நேரத்தை வீணடிப்பதுண்டு. அதனால் அதனை தவிர்த்து திங்கள் கிழமைகளில் கூட்டங்களை முடித்துக் கொண்டு அவர்கள் அலுவலகப் பணியாற்ற விடுவிப்பது அவசியமாகும். அதன்பின் அவர்களை ஆய்வு பணியில் அல்லது முகாமின் போது களப்பணிகளிலோ சந்திப்பதை சிறந்தது வாரத்தின் மற்ற நாட்களை தணிக்கை செய்யவும் கள ஆய்வு செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

அலுவலக கோப்புகளில் அகற்றப்படாத செய்திகள் களப்பணியின் போது கண்களில் படும். மக்களை சந்தித்தால் அவர்களது பாதி பிரச்சனை தீர்ந்ததாக உணர ஆரம்பித்து விடுவார்கள். களத்திலும், சகதியிலும், சேற்றிலும் தங்களை காண வருகிற அலுவலர்களையே மக்கள் மனதில் வைத்து போற்றுகின்றார்கள். மேலும் எந்த மாவட்டம் குறைவான அளவிற்கு முதல்வரின் முகவரிக்கு மனுக்களை அனுப்பும் வகையில் செயல்படுகின்றதோ அவை சிறந்த மாவட்ட நிர்வாகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதேபோல் உழவர்கள் குறைதீர்க்கும் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை மாவட்ட தலைநகரிலேயே நடத்தப்படாமல் பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் நடத்துவது அந்த பகுதியை சார்ந்த உழவர்கள் பெருமளவிற்கு கலந்து கொள்வதற்கு வாய்ப்பை வழங்கும்.

அதன் மூலமாக கடை கோடியில் இருக்கும் சிற்றுரை சார்ந்த உழவரும் ஆட்சியரைப் பார்த்து தங்கள் தேவைகளை கூற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்துவதால் மட்டுமே குறைகள் அனைத்தும் தீர்த்துவிடபடாது. அவர்களது கோரிக்கைகளை குறித்து வைத்துக்கொண்டு தீர்வு காண்பது முக்கியமாகும். அதேபோல் வேளாண் கிடங்குகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வாரம் ஒருமுறை சென்று பார்வையிடுவது, இடுபொருட்களின் தரத்தையும் வழங்குவது வழங்குதலையும் செம்மைப்படுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.