நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். அதாவது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டி டி தமிழ் ஹிந்தி தின விழா நிகழ்ச்சியின் போது தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல்த் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு விட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் ஆளுநர் ரவிக்கு திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திராவிட என்ற வார்த்தைக்கு பதில் தமிழர்  திருநாடும் என்ற வார்த்தையை தமிழ் தாய் வாழ்த்தில் சேர்த்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வரும் நிலையில் எக்சிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சீமான் இது குறித்து பேசியதாவது, திராவிடம் என்ற சொல்லை நீக்கியதற்கு இவ்வளவு கோபப்படுகிறார்கள். ஆனால் 50 வருடங்களுக்கு மேலாக தாய் மொழியான தமிழ் உயிரற்று கிடப்பதற்கு ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை.

தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து தூக்கப்படும். அப்போது என்ன செய்வார்கள் இந்த திராவிடர்கள். திராவிடத்தை வேண்டுமென்றே உள்ளே நுழைத்து விட்டு 3 சதவீதம் உள்ள பிராமணர்களை காட்டி 30 சதவீதம் திராவிடர்கள் வந்துவிட்டனர். மத்திய அரசிடம் கல்வி, மொழி மற்றும் வரி என அனைத்தையும் பறிகொடுத்து விட்டு தற்போது மாநில உரிமை பற்றி பேசுகிறார்கள். தமிழ் தேசியம் என்றால் என்ன என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேபோன்று திராவிடம் என்றால் என்ன என்று சொல்வதற்கு யாராவது தயாராக உள்ளீர்களா. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரீகம் தமிழர் நாகரிகம் என்று கூறும் நிலையில் அதனை திராவிட நாகரீகம் என்று மாற்றி சொல்கிறார்கள். மேலும் கவர்னரை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதால் வேண்டும் என்று இந்த பிரச்சனையை திமுக பெரிய அளவில் எடுத்து செல்கிறது என்று கூறினார்.