புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் விவகாரங்களில் நடிகர் விஜய் வெளிப்படையான நிலைப்பாடு எடுக்காததை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “அரசியலில் இருப்பவர்கள் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெறும் நிலையில், ‘நான் பேச மாட்டேன்’ என்ற நிலைப்பாடு மக்கள் நம்பிக்கையை பெற முடியாது” என்றார்.
மேலும், “ஒரு விஷயம் தவறாக இருந்தால் தவறு என்று சொல்ல வேண்டும்; சரியாக இருந்தால் சரி என்று வெளிப்படையாக கூற வேண்டும். புதுச்சேரியில் சிறுபான்மையினருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று விஜய் பேசியிருந்தார். அப்படியானால், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினர் தொடர்பான விவகாரத்தில் ஏன் அவர் குரல் எழுப்பவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை புதுச்சேரி மக்களும் கவனித்து வருவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, “உண்மை மக்களுக்கு தெரியும். தேர்தல் களத்தில் நேரடியாக சந்திப்போம். ஆனால் நியாயமான விஷயங்களில் ஒன்றாக நிற்பதே என் கருத்து” என்று தெரிவித்தார். மேலும் இந்த கருத்துகள், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
