திமுகவில் இணைந்த கையோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் ஐயப்பன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமாவை சாதாரணமாக விட அதிமுக தயாராக இல்லை. “ராஜினாமா செய்வதற்கு முன்பே அவர்கள் திமுகவில் இணைந்துவிட்டார்கள், அதனால் இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும்” என அதிமுகவின் துணை கொறடா ரவி அதிரடியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் கடிதம் அளித்துள்ளார். ராஜினாமாவை ஏற்காமல், இருவரையும் ‘தகுதிநீக்கம்’ செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் தற்போதைய மூவ்.

​சட்டமன்ற விதிகளின்படி ஒரு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டால், அவர் தானாகவே தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டியவர் என்பது அதிமுகவின் வாதம். தகுதிநீக்கம் செய்யப்பட்டால் வரும் காலங்களில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் அரசியல் அந்தஸ்தில் சிக்கல் ஏற்படும் என்பதால், ஓபிஎஸ்-ஸை சட்ட ரீதியாக முடக்க அதிமுக இந்த ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளது. ராஜினாமா ஏற்கப்படுமா? அல்லது தகுதிநீக்கம் வருமா? என்ற திக் திக் நிமிடங்கள் கோட்டையில் தொடங்கியுள்ளன.