தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக ஆளுநருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் பாஜகவின் நிழலாகச் செயல்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘எஸ்.ஆர். பொம்மை’ வழக்கின் தீர்ப்பை ஆளுநருக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று அவர் சாடியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, அதற்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், உடனடியாக விஜய்யைப் பதவி ஏற்க அழைத்து மெஜாரிட்டியை நிரூபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
