சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி காலனி எட்டாவது தெருவில் ஜெரி மெசாக்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த இந்துமதி என்பவர் முதலீடு சம்பந்தமாக ஜெரிக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலையை நிறுத்திய இந்துமதி வீட்டில் இருந்தபடி பண முதலீடு சம்பந்தமாக ஆலோசனைகளை கூறி அவரிடம் இருந்து சிறிது சிறிதாக பணத்தை வாங்கியுள்ளார். கடந்த ஒரு ஆண்டில் ஜெரி தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். இந்துமதி அதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவுகளை நிறுவனத்தில் இருந்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஜெரி முதலீடு பணத்தை சரிபார்த்த போது அதில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. மீதமுள்ள 44 லட்சம் தனது கணக்கில் இல்லை. இதுகுறித்து இந்துமதியிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ஜெரி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், திட்டமிட்டு இந்துமதி பணத்தை மோசடி செய்ததும், போலியான மெயில் மற்றும் வங்கி கணக்கை வைத்து ஜெரியை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனால் இந்து மதியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.