அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹில்ஸ்பாரோ நகரில் வசித்து வரும் நடராஜன் என்பவரது மனைவி பிரியதர்ஷினி (35), தனது 7 மற்றும் 5 வயதுடைய மகன்களை மர்மமான முறையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் வேலை முடிந்து வீடு திரும்பிய நடராஜன், தனது பிள்ளைகள் படுக்கையறையில் சுயநினைவற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தக் கொடூரமான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமெரிக்கப் போலீசார், பிரியதர்ஷினியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிள்ளைகளைக் கொன்றதற்கான பின்னணி மற்றும் அதன் உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து புலனாய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே இந்தச் சோகமான நிகழ்வு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
