மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் இந்த பகுதி உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் நெற்பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

நெற்பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நிற்பதால் அவற்றிற்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அதை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ராஜேந்திரன், தயாளன் மற்றும் பலர் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நவீன முறையில் மருந்து தெளிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதாவது ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் செலவு செய்து ட்ரோன் மூலமாக மருந்து தெளித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ட்ரோன் மூலமாக மருந்து தெளிப்பதால் விவசாயிகளுக்கு வேலை குறைகிறது. அதே சமயம் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கர் சுற்றளவுக்கு மருந்து தெளிக்க முடிகிறது. மேலும் மருந்தும், தண்ணீரும் அதிக அளவில் வீணாவதில்லை. ட்ரோன் மூலமாக மருந்து தெளிப்பதனால் மருந்து தெளிப்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.