பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இதனிடையே இருவரும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ள நிலையில், படிப்புக்கு பின் திருப்பூரிலும் காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இருவரது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்பின் நவீன் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின் திருப்பூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதுபற்றி ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து  ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தநிலையில், கடந்து 2ம் தேதி போலீசாரிடம் பேசி ஐஸ்வர்யாவை மட்டும் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர்.. அதன்பின்3ம் தேதி நவீனை தொடர்பு கொண்டு பேசிய அவரது நண்பர்கள் ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நவீன் ஒரத்தநாடு பகுதிக்கு சென்றார். தொடர்ந்து அவர் இதுகுறித்து வாட்டாத்திகோட்டை போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 8ஆம் தேதி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மர்மமான முறையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது  உறுதி செய்யப்பட்டு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில்,  இன்று கைதுசெய்யப்பட்ட  ஐஸ்வர்யாவின் தாயார் ரோஜா மற்றும் தந்தை பெருமாள் இருவரும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் நீதிமன்ற நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இது ஆணவ கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் புகார் அடிப்படையில் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று ஐஸ்வர்யாவின் கணவர் நவீன்  கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் 11 பேரை விசாரணை பிடித்து செய்ததில் இது ஆணவ கொலை என உறுதி செய்யப்பட்டு முதல் கட்டமாக அந்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.