மும்பையைச் சேர்ந்த 40 வயதான ஒப்பனை கலைஞர் பரத் அஹிரே கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலில் அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்பட்டாலும், போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை 12ஆம் தேதி பரத் அஹிரே, தனது மனைவி ராஜஸ்ரீ முன்னிலையில், சந்திரசேகர் பத்யாச்சி மற்றும் ரங்கா என்ற நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், ராஜஸ்ரீ வீட்டிற்கே அழைத்துச் சென்றது அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உடல்நிலை மோசமடைந்தபோது, பரத்தின் மகள்கள் உறவினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர் மலாடில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கும் போது, மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்ததாக தவறான தகவல் வழங்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் தொடக்கத்தில் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

ஆனால், மகள்களின் வாக்குமூலங்கள் மற்றும் அண்டை வீட்டாரின் தகவல்கள் அடிப்படையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. பரத் அஹிரே மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் அவரது மனைவி ராஜஸ்ரீக்கும் பங்கு இருந்தது என்பதும் உறுதியாகியது.

விசாரணையில், ராஜஸ்ரீ அதே பகுதியைச் சேர்ந்த பத்யாச்சியுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருப்பதும், இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையே காரணமாகக் கொண்டு, ராஜஸ்ரீ தனது காதலனுடன் சேர்ந்து கணவரை அகற்ற சதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி பரத் ஆகஸ்ட் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, ராஜஸ்ரீ மற்றும் பத்யாச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது சந்தேக நபரான ரங்கா இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர்.