ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி உலகம் முழுவதும் திரையரங்குகளை அதிரவைத்துக் கொண்டிருக்கும் ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’ திரைப்படம், சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்து, உலகளாவிய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம், திரையிடப்பட்ட நாள் முதலே பாக்ஸ் ஆபீஸில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் உலக அளவில் சுமார் 2.3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து, ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற காவியப் படமான ‘டைட்டானிக்’கின் வசூல் சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது.
கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த ‘டைட்டானிக்’ திரைப்படம், பல மறுவெளியீடுகள் மூலமாக உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையாளராக உருவெடுத்து நீண்ட காலமாக உலகின் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் முன்னணி இடத்தில் நீடித்து வந்தது.
ஆனால், தற்போது சூப்பர் ஹீரோ கதைகளங்களின் மீது உலக மக்களுக்கு இருக்கும் மோகத்தையும், ‘ஸ்பைடர் மேன்’ கதாபாத்திரத்தின் உலகளாவிய ஈர்ப்பையும் நிரூபிக்கும் வகையில், ‘பிராண்ட் நியூ டே’ திரைப்படம் டைட்டானிக்கைப் பின்னுக்குத் தள்ளி, உலக சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
டைட்டானிக் போன்ற ஒரு வரலாற்று காவியப் படத்தின் சாதனையை ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் முறியடித்திருப்பது உலக சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் மற்றும் ஹாலிவுட் வட்டாரங்களில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்களில் மக்களின் அலைமோதும் கூட்டம் இன்னும் குறையாததால், இத்திரைப்படம் விரைவில் ‘அவதார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் வசூல் மைல்கற்களையும் தாண்டி புதிய வரலாற்றை எழுதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
