உத்திரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரில், பெண் ஒருவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மொஹம்மத் காமில் மற்றும் மொஹம்மத் அகமது என்பது தெரியவந்தது. பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக ஒப்புக்கொண்ட இவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மிளகாய்பொடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கேங்க்ஸ்டர் சட்டத்தின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, கடந்த மே 23 அன்று இவர்களின் கைது குறித்து போலீஸார் செய்தியாளர்கள் சந்திப்பு  நடத்தினர். அப்போது போலீஸாருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த அந்த இரு கைதிகளும், தங்களின் செயலுக்குக் கொஞ்சமும் வருந்தாமல், செய்த தவறைப் பெருமையாக நினைப்பது போல் முகபாவனைகளை வெளிப்படுத்தினர். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த அடுத்த கணமே, போலீஸார் முன்னிலையிலேயே ஒரு கைதி தனது மீசையை முறுக்க, உடனே மற்றவனும் அவனைப் பார்த்து மீசையை முறுக்கி கெத்து காட்டியுள்ளான். போலீஸாரைக் கண்டு துளியும் பயமில்லாமல் கைதிகள் அலப்பறை செய்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.