டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும் ட்ரோன்கள், பாரா கிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்க விட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும்.

இதனை கருதி டெல்லியில் ட்ரோன்கள், பாரா கிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டர்கள் மற்றும் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்களில் இந்த தடை அமலில் இருக்கும் எனவும் தடையை மீறி யாராவது இந்த பொருட்களை பரக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.