செப்டம்பர் மாதம் இந்திய தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் தான் முக்கிய தலைப்பாக இருக்கும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “கூட்டணி நாடுகளுடன் நடக்கும் உரையாடலில் முக்கிய தலைப்பாக உக்ரைன் – ரஷ்ய போர் இருக்கும்.

இனி வரும் உரையாடல்களில் கூட இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தானிய ஏற்றுமதியை உக்ரைன் மேற்கொள்ள முடியாத அளவிற்கு ரஷ்யா சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது உலக அளவில் தானிய தட்டுப்பாட்டை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.