கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவரம்பு பகுதியில் ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரத்தில் இருக்கும் கடையில் 15 ஆயிரத்து 999 மதிப்புள்ள எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய சில மாதங்களிலேயே டிவி வேலை செய்யாமல் போனதால் அதனை சரி செய்து தருமாறு ரெனிஸ் கடைக்காரரிடம் கூறியுள்ளார். ஆனால் கூறியபடி கடைக்காரர் டிவியை சரி செய்து கொடுக்கவில்லை. அப்போது தயாரிப்பு பிரச்சனை இருப்பதாலும், வாரண்டி நாட்களுக்குள் பழுதடைந்ததாலும் புதிய டிவி தர வேண்டும் என ரெனிஸ் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் புதிய டிவியை வழங்கவில்லை. இதனால் மன உளைச்சலில் ரெனிஸ் குமரி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் டிவி கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 15 ஆயிரம் ரூபாய் அபராதம், டிவிக்கு செலுத்தப்பட்ட தொகை 15,999 ரூபாய், வழக்கு செலவுத்தொகை 5000 ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு உத்தரவிட்டனர்.