அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது,

ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது. பதிலுக்கு, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் சேதமடைந்து பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரானின் ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க உளவுத்துறையின் உயர்மட்ட அதிகாரியான ஜோசப் கென்ட் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்திருப்பது அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானால் அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லாதபோதும், டிரம்ப் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டியே அவர் வெளியேறியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காத நிலையில், தற்போது சொந்த நாட்டு அதிகாரிகளே டிரம்பின் போர் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.