மேற்காசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் ரகசியமாகச் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வார இறுதியில் ஈரானியப் பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட், “இவை மிகவும் நுட்பமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை யூகங்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“>

இந்த மோதலில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வைக் கட்டுப்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கான யுரேனியத்தைப் பறிமுதல் செய்யும் அமெரிக்காவின் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. “ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது” என டிரம்ப் கூறினாலும், ஈரானிய அரசுத் தொலைக்காட்சி இதனை மறுத்து வருவது குழப்பத்தை நீட்டிக்கச் செய்கிறது.

இருப்பினும், இஸ்லாமாபாத் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், அது மத்திய கிழக்கில் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு (Ceasefire) வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.