சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோன் ஆப்புகள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்ற எபின், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார்.

அதன் பின்னர், அந்த லோன் ஆப்பைச் சேர்ந்தவர்கள் அவரை மிரட்ட தொடங்கினர். மேலும், அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றி பலருக்கும் அனுப்பியதால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வேறு வழியின்றி தாயிடம் இருந்த தங்கச் செயினை பறித்துள்ளார்.

முகமூடி அணிந்து, வீட்டிற்குள் புகுந்த எபின், தாயிடமிருந்து செயினை பறித்த போது வீட்டில் இருந்த நாய் கூட குரைக்கவில்லை. இதை மையமாகக் கொண்டு, எபினின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நாய் குரைக்காததை மையமாக வைத்து சந்தேகித்து, எபினை விசாரிக்கத் தொடங்கினர். வினாடிகளில் நடந்த சோதனையில் எபின் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தாயிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, எபினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், லோன் ஆப் மூலமாக மிரட்டியிருந்த குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.