கனடாவின் கால்கரி நகரில் மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும், பனிப்புயலிலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு தனது டாக்ஸியிலேயே பிரசவம் பார்க்க உதவிய ஓட்டுநர் ஹர்தீப் சிங் டூர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
மேலும் கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த ஒரு தம்பதியை ஹர்தீப் தனது டாக்ஸியில் ஏற்றினார். சாலைகள் பனியால் மூடப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோதிலும், சுமார் 30 நிமிடம் போராடி பீட்டர் லோஹீட் மருத்துவமனைக்கு அருகே அவர் வாகனத்தைச் செலுத்தினார்.
மருத்துவமனையை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, டாக்ஸியின் பின் இருக்கையிலேயே அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பெரும் நிம்மதி அடைந்த ஹர்தீப், உடனடியாக மருத்துவமனை ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.
இந்நிலையில் தனது வாழ்நாளில் மறக்க முடியாத மிகச்சிறந்த தருணம் இது என்று நெகிழ்ச்சியுடன் கூறிய ஹர்தீப் சிங் டூரின் மனிதாபிமான செயலை பலரும் கொண்டாடி வருகின்றனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
