அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதற்கே எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை. உண்மையான விவசாயி என்றால், பிரதமரைச் சந்தித்து 22% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதில் திமுக அரசையே குறை கூறுவது போலி விவசாயி நிலையை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, ‘அமித்ஷா அதிமுக’வாக மாறியுள்ளதாகவும், பொதுக்குழு தீர்மானங்கள் இதற்குச் சான்று எனவும் அவர் கூறினார்.

“கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை தீர்மானிக்க பழனிசாமிக்கு முழு அதிகாரம் என கூறுவது மக்கள் முன் ஒரு மேக்கப். உண்மையில் அதிகாரம் பாஜகவின் கையில்தான் உள்ளது; இவர் டம்மி வேடமே,” என பாரதி விமர்சித்தார்.

அமித்ஷா அழைப்பில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, சந்திப்புக்குப் பிறகு ‘முகமூடி அணிந்து’ வெளியே வந்தது அவரின் பயத்திற்குச் சான்று என்று குறிப்பிட்டார்.

“மெகா கூட்டணி அமைப்பதாக கூறியும், எந்தக் கட்சியும் அவரை நம்பி வராத நிலையே நிலவுகிறது. 10 தோல்விகள் சந்தித்த பழனிசாமியை மிரட்டி கூட்டணியில் இணைத்ததே பாஜகவின் திட்டம்,” என்றார்.

நெல் ஈரப்பத அளவை உயர்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தபோதும் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூறாத அதிமுக, கோவை–மதுரை மெட்ரோ திட்டங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும் மத்திய அரசின் காரணத்தையே நியாயப்படுத்தியிருப்பது மக்களுக்கு துரோகம் என பாரதி கூறினார்.

திமுக ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு அவர் தொடர்ந்தார்:

“திராவிட மாடல் ஆட்சியில் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு 11.19% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியே பழனிசாமிக்கு பொறாமை காரணம்,” என்றார்.

கடன் விவகாரத்திலும் அதிமுக தவறான தகவல் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

“2011–2021 அதிமுக ஆட்சியில் மாநிலக் கடன் 500% உயர்ந்தது. தற்போதைய கடன் சுமை நிர்ணய வரம்பிற்குள் உள்ளது,” என்றார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மற்றும் நீதிபதி சுவாமிநாதன் விவகாரத்தில், அதிமுக பாஜகவின் கலவர அரசியலுக்கு துணைநின்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுக அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களில் ஸ்டாலின் அரசு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் பாரதி கூறினார்.

மேலும் “பாஜகவின் மதவெறி அரசியலையும், அதற்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் தமிழ்நாட்டு மக்கள் 2026ல் பாடம் புகட்டுவார்கள். 10 தோல்விகள் கண்ட பழனிசாமிக்கு மேலும் ஒரு தோல்வி காத்திருக்கிறது,” என பாரதி அறிக்கையில் தெரிவித்தார்.