அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம், அதிமுகக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். அவர் மேலும் கூறியதாவது:

“அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என சிலர் முனைப்புடன் செயல்படுகின்றனர். இதில் எதிரிகள் மட்டுமல்ல; கட்சியுடன் நெருக்கமாக இருந்து வருபவர்களிலும் இதே நோக்கம் கொண்டவர்கள் உள்ளனர். எதிரி யார் என்பது நமக்குத் தெரியும் — திமுக, கருணாநிதி, ஸ்டாலின். துரோகிகளும் யார் என்பது தெளிவாகவே தெரியும்.

ஆனால் மிக கவனமாக இருக்க வேண்டியது, நம்மோடு உறவாடி நம்மை உள்ளிருந்து கெடுப்பவர்களைப் பற்றியே. சில அரசியல் புரோக்கர்கள் இதற்காக செயல்படுகின்றனர். அவர்களை நாம் சரியாக இனங்கண்டதால் தான், பல சதித்திட்டங்கள், சூழ்ச்சிகளை மீறி, அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் ஆகியவற்றை எதிர்த்து — இந்தக் கட்சியைப் பாதுகாத்து, அதிமுகவை அசைக்க முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்துச் சென்றுள்ளார்.

இதே நிலைமை திமுக–ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருந்தால் அவர்கள் எந்த சூழ்நிலைக்குள் சிக்கியிருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஆனால், சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ‘கருத்துக்கணிப்பு’ என்ற பெயரில் தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 100 நாளே உள்ள நிலையில், திமுக ஆட்சியின் கவுண்டவுன் துவங்கியுள்ளது. இதற்குமுன்பாக அதிமுக செயல்பாடுகளைத் தளர்த்தவும், தொண்டர்களின் மன உறுதியை குலைக்கவும், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பெரும் சதித்திட்டம் தீட்டப்படுகிறது,” என தெரிவித்தார்.