அதிமுக செயற்குழு–பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மற்றும் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது:
“விலை நிலவரம் பற்றி பேச வேண்டிய சூழலில், கொலை நிலவரம் குறித்து பேசும் நிலைக்கு தமிழகத்தை தள்ளியுள்ளது திமுக ஆட்சி. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குகளில் அரசுக்கு அச்சம் ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக் என ஒவ்வொரு துறையும் ஊழலில் சிக்கியுள்ளது. திமுகவில் வழக்கு இல்லாத அமைச்சர்களே குறைவு; ஊழல் குற்றச்சாட்டில் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறது அரசு,” என்றார். கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணையைக் கண்டு திமுக அரசு பயப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“கள்ள ஓட்டுக்களால் திமுக வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறது. இறந்தோர் பெயர், இரட்டைப் பதிவுகள் போன்றவற்றையே நீக்குகிறார்கள்; இதற்கு திமுக எதிர்ப்பதற்கான காரணம் என்ன?” என்று பழனிசாமி கேட்டார்.
“திமுக கூட்டணியில் பாஜகவைக் கொண்டால் அது நல்ல கட்சி; அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? பாஜகவுடன் நாம் கூட்டணி அமைத்ததை முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,” என்றார்.
அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த அதே நேரத்தில் கீழ்தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“திமுக ஜனநாயக முறையில் இயங்கும் கட்சி அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அமைச்சர் துரைமுருகன் அவசரநிலை காலத்தில் பாதிக்கப்பட்டவர்; அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்?” என்றார்.
“அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். இந்த கூட்டத்தில் இருக்கும் பலருக்கும் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதிமுக வாக்குகள் சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று உறுப்பினர்களை எச்சரித்தார்.
மேலும் தைத்திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
