“தவெக அரசு எடுத்த கொள்கைக்கு மாறான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட நாங்கள் தயங்கியதில்லை; அதற்கு உதாரணமாக, அரசியல் பிரிவு செயலாளராக ஒரு ஜோதிடரை நியமித்ததற்கு நாங்கள் தெரிவித்த கடுமையான எதிர்ப்பால், மறுநாளே அந்த நியமனத்தை முதலமைச்சர் விஜய் ரத்து செய்தார்” என்று கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார். தவெக-வின் முடிவை ரத்து செய்ய வைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அரசியல் பவர், கூட்டணிக்குள்ளேயே இருக்கும் சலசலப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

​மேலும் பேசிய அவர், கடந்த மே 4-ம் தேதி மாலை மு.க.ஸ்டாலினை சந்தித்த போது, “இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக செயல்பட்டோம், இனி சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்; புதிதாக ஆட்சி அமைப்பவருக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்து அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்து விமர்சிப்போம்” என்று ஸ்டாலின் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசி வருவதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று பெ.சண்முகம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.